Wednesday, 6 December 2017

பழந்தமிழில் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள் க. வினோதா

நூல் மதிப்புரை – சிற்றேடு (அக்டோபர் - டிசம்பர். 2017)
பழந்தமிழில் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள்
க. வினோதா
20 ஆம் நூற்றாண்டின் ஒரு முக்கிய சிந்தனை மரபுகளுள் அமைப்பியல் ஒன்றாகும். இதனை முன்னெடுத்தவர்களுள் தமிழவன் முக்கியமானவர். அமைப்பியல், குறியியல் ஆய்வுகளைத் தமிழியல் திறனாய்வு முறைகளோடு இணைத்துக் காட்டியவர். அமைப்பியல் சிந்தனை  பழந்தமிழ் நூல்களில் இடம்பெறுவதை விளக்கும் விதமாக   “பழந்தமிழில் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள்” எனும் நூலினைத் தமிழவன் எழுதியுள்ளார். குறி, குறிப்பீடு, குறிப்பான் இவைகளைப்பற்றி  மேலைநாட்டு அறிஞர்களின் சிந்தனை தமிழர்களின் சிந்தனையோடு ஒத்துபோகும் பண்பினை இருமைக்குள் நின்று விளக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலில் மொழியியலும் இலக்கியமும், சொல்லாடல், நச்சினார்க்கினியர் குறியியல் , குறியியல் எனும் நான்கு கட்டுரைகள் உள்ளன.
மொழியியலும், இலக்கியமும் எனும்  கட்டுரையில் மொழியியல் எவ்வாறு பிற துறைகளோடு இணைகிறது என்று விளக்கியுள்ளார்.  ரோமன் யாக்கப்சனின் மொழி  கடந்த நிலையைத் தொல்காப்பியத்தின் குறிப்பில் தோன்றலோடு ஒப்பிடுகிறார்.   இவ்வாறன கருத்தியலை நன்னூல் கூறும் எட்டு வகைக் குறிப்பில் தோன்றலோடு விளக்குகிறார். இக்கருத்தினைத்  “தலைவர் மகிழ்ச்சியில்  இருந்தார்”,  “தலைவர் மகிழ்ச்சியில் மிதந்தார்” எனும் இரு உதாரணங்களின் வழி விளக்குகிறார்.  ‘இருந்தார்’,  ‘மிதந்தார்’ என்ற இரண்டிற்கும் உள்ள சேர்க்கை உறவுகள் ஆகுபெயர், தொடர்பால் உருவாயினும் தமிழ் மொழியில் இது வேறுபட்டு இயங்குவதைக் குறிப்பிட்டுள்ளார். ஆகுபெயர் முதலிய குறிப்பில் தோன்றல்கள் மொழியின் இடைவெளிகளால் கட்டமைக்கப்படுகின்றன என்று கூறி இவை மொழிகடந்த நிலையில்லை என விளக்குகிறார்.  இதைப்போலவே இலக்கியத்தில் வரக்கூடிய உள்ளுறை , உருவகம் என்பவையும் மொழியினுடைய நீட்சியாலே உருவாகின்றன என்கிறார். மொழியின் இடைவெளி தான் மொழிக்கு நீட்சியைத் தருகிறது. அதாவது மொழி செயல்படும் வெவ்வேறு இடைவெளி, நீட்சி நிலைகளாக இவற்றைக் கருதவேண்டும். மொழி செயல்படும் தளங்களுக்குள் இவைகளைக் காணவேண்டும் என இக்கட்டுரை வலியுறுத்துகிறது.  அனைத்தும் மொழிச் செயல்பாடே என்று வலியுறுத்துவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. மொழி கடந்த நிலையும் கூட மொழி செயல்படும் வெவ்வேறு தளங்களைச் சார்ந்தவை என்று கூறுவதாகக் கட்டுரை உள்ளது.
சொல்லாடல் எனும் கட்டுரையில் சொன்மையும், பொருண்மையும் குறிப்பான், குறிப்பீடோடு தொடர்புபடும் விதத்தினைக் கூறியுள்ளார். இதனுடன் தொடர்புடைய சமஸ்கிருதக் கருத்தான பத்ருகிரியின் ‘வாக்கிய பாதிய’  என்னும் ஸ்போட்டத்தைக் குறிப்பிடுகிறார். ஸ்போட்டம் பற்றி குறிப்பிடும் பொழுது கீழ்க்காணும் கருத்துகள் குறிப்பிடத்தக்கவை.
“ஸ்போட்டம் இருப்பதால் தான் பொருள் மனத்தில் புலப்படுகிறது. அதாவது அறிவு மொழிரூபத்தில் இருக்கிறதென்று இதிலிருந்து பெறப்படுகிறது என்று”கபில்கபூர் கூறுவதைச் சொல்கிறார். இது இதயம், (pre-intellectual language), மத்தியனம் (language located in buddi), வைகாரி (the sequential, ordered arrangement of discrete units of language) இவைகளை அடிப்படையாக கொண்டது.
இக்கருத்துப் பின்னணியில் பொருள் வேறு, பொருண்மை வேறு என்பதில் ஸ்போட்டத்தின் தன்மை இருக்கிறது என்கிறார். பொருண்மை, சொன்மை கருத்துகள் வடமொழித் தொடர்பினால் வந்திருக்கலாம் என்கிறார்.
ஸ்போட்டம் மொழியுடனும் மொழியிலிருந்து வேறுபட்டும் நிற்கிறது. ஸ்போட்டம் , சொல்லாடல் , பொருண்மை மூன்றும் ஒரே தளத்தில் பயணிக்க  கூடியவை.   ஸ்போட்டத்தில் மொழிக்கிடங்கும் பேச்சும் கலந்துள்ளன. இது சொல், சொன்மை என்ற சசூரின்  இடுகுறித்தன்மையோடு ஒத்துப்போகும். மொழிக்கிடங்கு என்பது மொழியின் சமூகப் பரிமாணம் என்கிறார் சசூர். இதன் வழியாக ஸ்போட்டத்தில் மொழிக்கிடங்கும் பேச்சும் கலந்துள்ளன எனலாம்.  
மிஷெல் பூக்கோ- ‘பொருள்களின் ஒழுங்கு’, சொல்லாடல்கள், குறிகளால் உருவானவை எனினும் குறிகளால் விஷயங்களைக் குறிப்பதைவிட அதிக பணி சொல்லாடல்களுக்கு உண்டு. இந்த ‘அதிகம்’ என்பதுதான் சொல்லாடல்களை மொழியாகவோ பேச்சாகவோ குறுக்குவது இல்லை. இந்த அதிகம் என்பதைத்தான் வெளிக்கொண்டு வரவும் விளக்கவும் செய்ய வேண்டும். சொல்லாடல் என்பது உற்பத்தி உறவுடன் நேரடித் தொடர்புடைய  கருத்துருவங்களில் இருந்து மாறுபட்டது. அதாவது அறிவின் புதைபொருளியல் சொல்லாடல்  என்கிறார்”.
பென்வினிஸ்த்தின்,  “ஒலிகள், பொருள்களன்கள், வார்த்தைகள் ஆகியவற்றிற்கு மொழியளவில் செயல்பாடுண்டு” என்பதும்; டயனெ மாக்டொனாலாவின் “சொல்லாடல்களின் கோட்பாடுகள் சொல்லாடல்களுக்கு உரையாடல் குணம் இருக்க வேண்டும்” என்பதும்; சொல்லாடல்கள் பற்றிய வரையறைகளைத் தருகின்றன.
சொல்லாடலுடன் ஸ்போட்டம், பொருண்மை, குறிப்பான் இவைகளின் இணைவினைக்  குறித்துள்ளார். சொன்மை, பொருண்மை, ஸ்போட்டம், லாங்(மொழிக்கிடங்கு- laung ), பரோல்(பேச்சு- parole) இவைகள் சொல்லாடலோடு தொடர்புடையவை என்று விளக்குகிறார். சொல்லாடல் அமைப்பு ஒழுங்கிற்கு உட்பட்டும் உட்படாமலும் இருந்து முன்னவைகளிலிருந்து வேறுபட்டும் இருக்கிறது என்பதை ஃபூக்கோ வழி நிறுவுகிறார். தொல்காப்பியத்தின் பொருண்மை தொடர்பான செய்தி வடமொழித் தன்மையுடையது என்பது ஆராய்ச்சிக்குரியது. சொல்லாடல் மொழியின் முன் செயல்பாடுகளுடன் வழி தோற்றத்துடன் தொடர்புடையதை  மேற்கத்திய கோட்பாட்டாளர்களின் விளக்கங்களுடன் கூறியுள்ளார். வாசகன் கையில் சொல்லாடலைத் தந்ததும் தொல்காப்பிய செய்யுளியல் மீளாய்வு  அவசியத்தினைக் கூறியதும் வரவேற்கத்தக்கது.
நச்சினார்க்கினியரின் குறியியல் எனும் கட்டுரையில்  நச்சினார்க்கினியார் இடுகுறிச்சார்ந்தே சிந்தித்துள்ளார் என்கிறார். இவரது குறியியல் மாதிரியானது மொழியை மாதிரியாக எடுத்துக்கொண்டு அதன் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு பொருள் கொள்ளும் முறையாகும். தனது கருத்திற்குப் பொருத்தமாக அமைக்கும் முறை. உண்மையாக மாற்றும் திறமையும் மூல நூலுக்கு எதிராக அமையாமல் நுட்பமாக மாற்றும் அரசியலையும் கொண்டுள்ளது. தொல்காப்பியப் பனுவலை மாதிரியாக எடுத்துக்கொண்டு அதன் மீதான தன்னுடைய ஒரு விளக்கத்தின் மூலம் சமஸ்கிருதத்துடனான கலாச்சார இணைப்பைக் கொண்டதற்குக் குறியியல் சார்ந்த சிந்தனைதான் காரணம்  என்கிறார்.  ஆகுபெயர், அன்மொழித்தொகை போன்றவற்றை மொழி குறியீட்டுத் தளத்தில் தொடர்பு படும் விதமாக நச்சினார்க்கினியர் முன்வைக்கிறார் என விளக்குகிறார். அகம், புறம் இணைவை அவர் கூறுவதற்கும் குறியீடுச் சார்ந்த சிந்தனையே காரணம் என்கிறார்.
 குறியியல் எனும் கட்டுரையில் மொழி என்பது குறியாகவும் ஆகுபெயர், அன்மொழி, உருவகம், இவை போன்று வெவ்வேறு நிலையிலும் செயல்படவல்லது. மொழியின் வெவ்வேறு சாத்தியப்பாடுகளை லெக்கான், தெரிதா, ஃபூக்கோ வழி மொழிக்கும் அது உணர்த்தும் பொருளுக்கும் உள்ள குறியீட்டு உறவுகளைக் குறிப்பிடுகிறார்.  மொழி ஒழுங்கு நிலை பற்றிக் குறிப்பிடும் பொழுது ஒழுங்கின்மைகளும் சாத்தியம் என்பதன் தொடர்ச்சியாகத் தொல்காப்பித்தின் புறநடைகள் உணர்த்துவதையும் குறிப்பிடுகிறார். மொழிக்கும், பொருளுக்குமான உறவுகள் குறியீட்டு நிலையில் இருப்பதால் பல்வேறு பொருள் சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன என்பதைப் பூக்கோ, தெரிதாவின் வழி விளக்கித் தொல்காப்பியத்தில் உள்ள தெரிநிலை – குறிப்பு, ஆகுபெயர், உள்ளுறை  முதலிய கருத்தியல்களோடும் ஒப்புமைப்படுத்தி விளக்குகிறார்.   முன்னம், நோக்கு, மாட்டு வழியாக வெவ்வேறு சாத்தியப்பாடுகளை உற்பத்தி செய்யக்கூடியதாகவும் மொழி இருந்து கொண்டே இருக்கிறது.
          தொல்காப்பியம், உரையாசிரியர்கள் (சேனாவரையர், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர், இளம்பூரணர், பேராசிரியர்) குறிப்பிடும்  தமிழ்ச் சிந்தனை மரபில் செயல்படும் மொழியின் பல்வேறு குறியீட்டு நிலைப் பொருள்சாத்தியங்களை சசூர், பூக்கோ, ரோலன் பார்த்,  தெரிதா , லெக்கான், விட்டிஹென்ஸ்டீன் போன்றவர்களின் கருத்துக்களோடு ஒப்பிட்டு விளக்கியுள்ளார். இங்குக் குறியியல் சார்ந்த சிந்தனை வளராமல் போனத்தற்குச் சொன்மை, பொருண்மை ஆய்வுகள் வளராமையே காரணம் என்கிறார்.
 தமிழின் குறியியல் சிந்தனையை நான், நீ எனும் இரு சொற்களின் வாயிலாக விளக்கியுள்ளார். அதாவது இவ்விரு சொற்களும் செய்யுளியல் கூறும் முன்னத்தால் பெறக்கூடியதான சொல்பவர், கேட்பவர் இரண்டும் ஆசிரியர், வாசகனுடன் தொடர்புற்று இருப்பதை விளக்கியுள்ளார்.
பொருளுக்குப் பொருள் காணுதல் தமிழ் மரபிலும் உண்டு என்பதற்கு உரை கூறும் வகைகளை விளக்குகிறார். அதாவது நிரல் நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று ஆகியன.  இவ்வுரை வகைகள் அனைத்தும் எப்போதும் இன்னொன்றைக் குறித்து நிற்கும் உரை வகைகளாகும். எனவே குறித்தன்மையை இந்த  உரை வகைகள் பெற்றிருக்கின்றன. குறியியலின் பின்னணியைத் தமிழ் மரபின் சிந்தனையோடு அணுகினால் புதுவிதமான பொருள்தளத்திற்குச் செல்லமுடியும் என்பதை வலியுறுத்துவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
          இந்நூல் பழந்தமிழ் நூல்களின் உரைகளைக் குறியியல் சிந்தனையோடு அணுகுவதற்கான வழிமுறையைத் தொகுத்துத் தருகிறது. இதற்கான மூலங்கள் தமிழ்ச்சிந்தனையிலும் இருப்பதைக் கூறுகிறது. பழந்தமிழ் உரைகளைக் குறியியல் அறிவோடு அணுகுவதன் வாயிலாக உரையின் பின்னணிகளை, சார்புநிலைப் போக்கை அடையாளம் காண முடியும். இக்கருத்தினை வழியுறுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது எனலாம்.
          அமைப்பியல்- பின் அமைப்பியல் ஆய்வுமுறைகளையும் தொல்காப்பியம், அதன் மீதான உரையாசிரியரின் ஆய்வுகளையும் இணைத்துத் தமிழியல் ஆய்வை மரபும் புதுமையும் இணைந்த ஒன்றாக இந்நூல் பார்த்திருக்கிறது. சங்க இலக்கியம், புதுக்கவிதை, மேலைக்கவிதைச் சான்றுகளுடனும் இந்த ஆய்வு அமைந்துள்ளது. இவ்வாறான ஆய்வுகள் தமிழின் குறியியல் சிந்தனையை நவீனப்படுத்தும். பழந்தமிழ் ஆய்வுகளுக்கும் இலக்கியம் / கவிதையியல் ஆய்வுகளுக்கும் ஒரு மாதிரி ஆய்வாக இதைக் குறிப்பிட முடியும்.     

 நூல்       :       பழந்தமிழில் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள்
ஆசிரியர் :       தமிழவன்
பதிப்பகம்:      உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்
     பதிப்பு:      மு.ப. 2009

  

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...