Monday, 24 May 2021

மந்தை பொருள்

 

கொஞ்சமாக திறக்கும் வானம்

கூட வரும் மேகம்

மூங்கில் உதிர்க்கும் வேனில்

இமை கவ்வும் நிலம்

அசைவில் அழைக்கும் பார்வை

உடன் சேமிக்கும் நேரம்

அடாது விம்மும் பாடல்

அடுக்கிய புத்தகம்

அவாவும் தூரம்

வட்டத்துள் மிதக்கும் மொழி

திரளும் மந்தை பொருள்.

Friday, 10 July 2020

அவ்வளவுக்கும் ஒன்றுமில்லைக்கும்

நேரலை தழல் முக்கி அடி நகர்த்த கூர்
நுனி குவியும் மூக்குகள் மட்டும் புறம்
தாவ அடங்கிய விரல்கள் பிசுபிசுப்புடன்
பின்னழித்து முன்சீவி புடுங்கி எறிந்த இந்த
நகம் குப்பையிலும் முளைக்கக் கற்றுள்ளது

சுற்றம் துணிய எதையாவது எழுதி
விட்டாலும் இருக்கும் இல்லைகள்

பொய்யைக்  கேள்வியுடன் முனுமுனுக்கும் உண்மை எதிர்வினைப் போக்குக்காட்டும் அவ்வளவுக்கும் ஒன்றுமில்லைக்கும்
இருக்கும் உறவு போன்று சும்மாவது.


நேற்றின் வாய்த்துல்லியம்

கண்டிறாத நடுநிலம் அரும்பிய புல்
என்னவோ நிறம் கொள்ள இருந்தது
கிடுகிடுக்கும் எண்ணிக்கை காதடைக்க கொல்லையில் கருகும் பெருநெடி

குறிபிழைத்த மிச்சம் நீரில் ஊறவைத்த பாளையாய் அலைவு ஏரணம் கூறும்

ஆந்தை குமுக நிமித்தம் பேசி அசை பிரித்த  தனிச்சொல் மென் மெதுவாய் படர்க்கையாக
தீம்கிளவி கலந்து மேலாக ஊர்ந்த நேற்றின் வாய்த்துல்லியம் சுரமேதும் இல்லாமலே.


Wednesday, 8 July 2020

கூற்று நிரப்பும் பெரும் வேலை

ஊதினால் கூடவும் ஊத்திவிடலாம்
வற்புறுத்தி ஆற்றிய  கூச்சல் மேகம்
வனப்புடன் தெறித்த ஒளிக்குள் தவறி
விழுந்த வெல்வெட்டு பூச்சி சிவப்பின்

தீத்தலை கிள்ளி போட்டு நெருங்கும்
நேர்த்தி எல்லாமும் கூட்ட கழியும்

நிலை களைத்து கல்செய்து கூற்றுகள்
நிரப்பும் பெரும் வேலை இருக்குமென
தெரிந்தே இடறி விழும் பெரும் தேடல்
வெண்மண் குவித்துத் துளையிடுகிறது.


Monday, 6 July 2020

நீயெனும் சொல்லுள் மிதக்கும்

மின்னல் இழை இறுத்திச் செல்லும்
நிவரும் பச்சை மலை வெள்ளிக்கொள்ள செங்குத்துச் சாய்சாரல் தட்டியதிர
மெல்லிலை அலங்கி விம்மி விசிற

வெற்றுத்தரை சேகரித்த வெளிர்
ஓரம் தெரியா இருப்பதை நடத்தும்

தன்னிலை பெருக்கமுற முன்னிலை
இருக்கும் நீயெனும் சொல்லுள் மிதக்கும்
பன்மை விலகல் கடைநிலம் செல்லும் வழியெல்லாம் படியும் வண்டல் போல்.


Sunday, 5 July 2020

வக்கற்ற காலத்துளிர்

மாற்றி அழைக்கப்பட்ட பெயருக்குள்
நில்லாமல் அதனில் அதனாக சொட்டி
வெட்ட வெளியெங்கும் தெளிக்கும் தூரல்
நிலம் துளைக்க தளிரின் வால்நுனி தங்கிய வக்கற்ற காலத்துளிர் அதுவாக உறையும்

கரைக்குக் களைப்பு வற்புறுத்துகிறது
தட்டி உலாவி இழுத்த கட்டளைக் கடினம்

கலங்கிய கழியில் நிலா வெளிச்சம் தூவுமா  தெரியாது காரணம் நிலைத்து விட்ட
நேற்றில் சுவற்றில் அடைத்து வெளிச்சம் படாமல் பொத்தி வைத்துள்ளன விரல்கள்.

அல்வழி புறச்செலவு

தடம் நசுக்கி நீட்டி முழக்கி நுணுக்க
முற தள்ளினாலும் ஒட்டிடும் மனிதனாக்கம்
நீக்கி சொன்னவைக்கு எல்லாம் உரிமை
அதுவும் அவையும் எதிர்முன் திட்டமானது

ஓட்டமிட்ட சூழல் அங்குமிங்கும் பிசிற
அல்வழியாக குதிக்கிறது புறச்செலவு

வடிவகத்தினுள் சின்னதும் பெரியதுமாக பறக்கும் நுரை முட்டைகள் வெடிப்பைத்
தள்ளி வைத்துள்ளன சற்று நேரத்திற்கு.


நகல் நாள்

அனல் கசிந்த அருகாமை இருக்க
முதன்முதலாக சுவாசத்தினால் மட்டும் 
ஒரு உரையாடல் கணினித்திரை கிளித்து
கொட்டி கிடந்த மொழிப் பூக்கள் கிளரி
பின் அடுக்க வந்த நன்னெடியில்
தொலைந்த பொழுதின் நகல் நாள்

பாதுகாப்பின் மென்சூடு தாங்கி நடுவில்
தொங்கினாலும் அதுதான் அதன் கூடு

எடுத்து சேர்த்து மூட்டமிட்டு இயந்திரம் அனுப்பி மையிட்டு வெளியேறிய
வரிகளை மெல்ல வருடியதால் கிடைத்த பொருளை மட்டும் குவிகை ஒளித்து வைத்ததைத் திறந்து பார்க்கும் உரிநாள்.


வேற்று கிரகமும் பக்க சூரியனும்

கடையந்தி பக்கமாக சரிய நிறமெல்லாம் நுண்புள்ளி சிதர் திவலைகளாகி
நீர்த் தெளிக்க பேரிருள் கடந்து வந்த
ஆனி மாதத்தின் விடியல் குக்குக்உ
ஆனபோதும் என்னேரமும் அசைய
தயங்கி நிற்கிறது பச்சை மூங்கில்

கிசுகிசுக்கிறது கட்டங்களில் நெருப்பு
நுழைய திக்குகள் செயல் மறந்து

பிரிந்த கையும் காலும் சிதைய
மூக்கும் விழியும் வட்டங்களில்
எதற்கேனும் எதையாவது பொருத்திக் கொள்ளட்டும் இன்றைக்கான பொருள்
வேற்று கிரகமும் பக்க சூரியனுமே.

கொஞ்ச நாளாகவே முட்டைக்குள்
இருந்ததால் வால் அமுங்கிய
கோழிக் குஞ்சுகளின் குன்குன்
என்னும் ஓசை விடாம தொடர

தூசு படிந்த செய்தி வருடி தேய்ந்து
வருகிறது திடமான அன்றாடம்

இறுக்கிக் கட்டிவைத்த இறுக்கம் நான்களை மென்று ஊதிவிட பறந்த எல்லாமும்
முறிக்கும் சோம்பல் நெளிவில் தொலைந்து
போயிருந்தாலும் போகியிருக்க கூடும்.


இடம்மாறும் தாவல் தொழில்
கற்ற தேரை கல் மறைவில் தலை
நீட்டி விசுக்கென நோக்க எட்டி
நிற்கும் வெளுத்த நெடுபயணங்கள்
பாதி சாலையில் தேங்கி கிடக்க
அடங்கா அலைவில் வால் பொசுங்கிய
பறவை வரைபடத்தினுள் பறந்து
மாலை பொழுதை உறைய வைத்திருக்கிறது
அவ்வப்பொழுது சுற்றித் திரியும்
தட்டான் வம்புக்கு வந்து நன்பகலை
அதில் ஒத்திவிட்டு போய்விடுகிறது.


மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...