திணையுணர்
பருவம் (நூல் மதிப்புரை)
தற்காலத்தில்
உலகமையமாக்கல் பின்னணியில் பல்வேறு இடர்பாடுகளை இயற்கையும் மனிதனும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதனை எதிர்கொள்வதற்கு இயற்கையைப் பற்றிய புரிதல்
அவசியமாகிறது. உலகம் பற்றிய ஒட்டுமொத்த அறிவு
மரபையும் அறிந்து விஞ்ஞான ரீதியாக உணருதல் என்பது தேவையாக உள்ளது. இந்த வகையான சிந்தனை
ஓட்டத்தைச் சூழலியல் திறனாய்வு என்கின்றனர். திணைச்சார்ந்த கருத்துகளையும் அவ்வாறு
நோக்கும் திறனாய்வாகவும் கோட்பாடாகவும் வளர்த்தெடுத்து உலகிற்கு வழங்க முடியும் என்பதைத்
தலையாய நோக்கமாக கொண்டு க. ஜவகர் ‘திணையுணர் பருவம்’ (திணையியல் கட்டுரைகள்) என்ற
நூலினை எழுதியுள்ளார். புதுப்புனல் வெளியீடான இந்நூலுக்குக் கோவை ஞானி அவர்கள் வாழ்த்துறை
வழங்கியுள்ளார். முன்னுரையை நூலின் ஆசிரியர் வழங்கியுள்ளார். உள்ளுறை பதினாறு தலைப்புகளில்
இடம்பெற்றுள்ளது. பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்த இந்நூலின் அறிமுகமாக இக்கட்டுரை
அமையும்.
நூலில்
இடம்பெற்ற கட்டுரைகளைப் பொருள் ஒற்றுமை நோக்கி கீழ்க்காணும் தலைப்புகளில் பிரிக்கலாம்.
Ø திணையுணர்த்தல் (4)
Ø மீளாய்வு நோக்கில் சங்க இலக்கியம்
(3)
Ø தமிழ் மெய்யியலும் சித்தர் மரபும்
(3)
Ø மண்ணியல் ஆய்வாளர்கள் (3)
Ø மதிப்புரைகள் (3)
திணையுணர்த்தல்
தமிழியல்
ஆய்வுப்பரப்பில் திணையியல் ஆய்வை முன்னெடுப்பதற்கான நோக்கம், தேவை போன்றவைகளை மேற்கத்திய
கோட்பாடுகளின் வழியில் விரிவான முறையில் அலசுகின்றன இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள்.
முதல் கட்டுரையான ‘திணையுணர் பருவம்’ எனும் கட்டுரை திணைக்கோட்பாட்டை வளர்பதற்கான முன்னுரையைப்
போன்று அமைகிறது. திணைக்கருத்தியலை உலக நிலைப்பட்ட ஒன்றாக ஆக்குவதற்கான முயற்சியை பொது
/ சிறப்பு எனும் இரு நிலைகளில் விளக்குகிறார். பொதுநிலையில் இயற்கை, உயிரினத்தொகுதி என்பதும் சிறப்பு நிலையில் பண்பாட்டு அறிவு மரபுகளை முன்னெடுத்தல் என்ற அடிப்படையில்
விளக்குகிறார். இவற்றை உலகச்சூழலையும் இந்திய
/ தமிழ்ச் சூழல்களையும் கருத்தில் கொண்டு நவீனத்துவத்தின் நுகர்வுக்கலாச்சாரம்
இவைகளால் ஏற்பட்ட சிதைவுகளைச் சரிசெய்வதற்கான அடிப்படையை தரக்கூடியதாகத் திணைச்சார்ந்த
சிந்தனை அமையும் என்பதை வலியுறுத்துவதாக அமைகிறது.
சூழலியமும் திணைக்கோட்பாடும்
என்ற கட்டுரையில் திணையியல் ஆய்வுக்கான சில மாதிரிகளை மேற்கத்திய கோட்பாட்டளார்கள்,
தமிழ் திணையியல் ஆய்வாளர்கள் வழி விளக்குகிறார். சூழலிய கோட்பாட்டை போலவே திணைக்கோட்பாட்டை
அணுகுவதற்கான சில அடிப்படைகளை இக்கட்டுரை முன்வைக்கிறது.
‘சூழல் பெண்ணியமும் திணைக்கோட்பாட்டு
பெண்னியமும்’ எனும் கட்டுரையை முந்தைய
கட்டுரையின் தொடர்ச்சியாக அணுகலாம். வளர்ந்த சூழலியக் கோட்பாடு எவ்வாறு மற்ற கோட்பாட்டோடு
இணைந்து செல்கிறதோ அதே போலவே திணைக்கோட்பாட்டையும்
மற்றவற்றுடன் இணைக்கமுடியும் என்பதை நிறுவும்
வகையில் சங்க பெண்கவிஞர்களின் கவிதைகளை அனுகியுள்ளார்.
‘திணைக்கோட்பாட்டின் அறவியல்’ எனும்
கட்டுரையில் பகிர்ந்துண்ணும் பண்டைய இயற்கை பண்பைத் திணையறமாக அதுவே திணைக்கோட்பாட்டை மேம்படுத்தும்
சூழலியத்தின் அறவியல் கோட்பாடு என்கிறார். திணைக்கோட்பாட்டின் அறவியல் கொள்கைகள் தொல்காப்பியம்
சங்க இலக்கிய இணைப்பின் வழியாக பெறமுடியும் என்கிறார். திணைக்கோட்பாட்டின் அமைப்பும்
அறவியலுக்கான அடிப்படைகள் முதல், கரு, உரி என்பதிலிருந்து பெறமுடியும். இதனை முதல்
- புவியமைப்பு + பருவக்கால அமைப்பு கரு – மனித அனுபவங்கள், உணர்வுகள் உரி – மனித உறவுகள்
என்று விளக்குகிறார். உயிர்த்தொகுதியின் முதன்மை (முதற்பொருள்), இயற்கை உயிர்த்தொகுதியுடான
ஒத்திசைவு (கருப்பொருள்), ஒத்திசைவுகளின் வழியாகப் பெறும் பொதுமையாக்கம் (உரிப்பொருள்)
இவைகளின் ஊடாக திணை பொதுமையாக்கத்தை நிறுவுகிறார். இயற்கை மையமான படைப்பிலக்கிய மரபினை
முன்னிலை செய்வதற்கான அடிப்படைகளை இக்கட்டுரைத் தருகிறது.
மீளாய்வு
நோக்கில் சங்க இலக்கியம்
சமூகவியல்,
அறிவியல், கலையியல், மொழிப்பொருண்மையியல் இவற்றைப்
பிரதிபலிக்கும் ஒன்றாக கருத வேண்டுமே தவிர வெறும் இலக்கண நூலாக மட்டும் கருதல் கூடாது
என்பது மையக்கருவாகும். என்றுமே நவீனமாக இருப்பது தொல்காப்பியம்தான் இது பல முன்மாதிரியான
சிந்தனைகளை விதைக்க கூடியது என்கிறார். தொல்காப்பியக் கல்வியைப் பனுவல் வையப்பட்ட ஒன்றாக
முட்டும் கருதாமல் வழக்குத் தொடர்பான அனைத்துக்கூறுகளையும் இணைத்துப் பார்பதன் வாயிலாகத்
தமிழியல் ஆய்வுகளை நவினத்தன்மையோடு அணுக இயலும் என்பதைக் கூறும்விதமாகத் தொல்காப்பிய
நெறிக்கு ஒத்த ஆய்வுகளின் மீள் தேவை அல்லது ஒருங்கிணைந்த பார்வை மீட்டெடுப்பதறகான ஒரு
முன்னுரை என்ற கட்டுரை அமைகிறது. இதன் தொடர்ச்சியைப்போன்று சங்க கவிதகளும்: புதிய
/ இயல்பான பார்வைகளை நோக்கிய முன்னெடுப்பிற்கான முன்னுரை, நற்றிணை: பாடவேறுபாடும்,
உரைவேறுபாடும் எனும் கட்டுரைகள் அமைகின்றன.
தமிழ்
மெய்யியலும் சித்தர் மரபும்
‘சிலப்பதிகாரம் கவிக்கூற்றில் வெளிப்படும் திணைமெய்யியல்’
எனும் கட்டுரை இளங்கோவடிகள் பின்பற்றும் தமிழ் அறம் பற்றி விவாதிக்கிறது. இயற்கையை
முதன்மையாக கருதல், ஏற்கனவே இருக்கும் அதிகாரத்தை எதிர்க்கும் பொழுதும் வெளிப்படும்
அறம், அரசர்களின் செயல்களிலும் காணாலாகும் அறம், திணை மரபை வேண்டிநிற்கும் திணைக்குடிகளின்
குரவை, வரிப்பாடல்கள், கண்ணகி, கோவலன் இவற்றின்
ஊடாக உணர்த்தும் அறச்செயல்பாடுகள் போன்றவைகள் அனைத்தும் திணைச்சாந்த மெய்யியல் சிந்தனையை
அளிக்கின்றன. என்பது சிலப்பதிகாரத்தைத் தத்துவப் பின்புலத்தில் அணுகுவதற்கான ஆய்வுப்
பின்புலத்தைத் தருகிறது.
‘வேமனாரும் பிற்காலத் தமிழ் அற இலக்கியங்களும்’,
‘வள்ளலாரின் நவீன முகம் பாரதி ’(வள்ளலாரும்
பாரதியும்:சிற்றிலக்கிய ஒப்பீடு) எனும் இரு கட்டுரைகளும்
திணைச்சார்ந்த அறத்தை இவர்களின் படைப்புகளின் வாயிலாக அலசுகிறது. பிற்காலத்தில் சித்தர்
மரபில் தொடர்ந்த திணையறத்தை அடிப்படையாக கொண்டு
இக்கட்டுரைகள் அமைகின்றன. தெலுங்கு வேமானரின் அறிமுகம் இவர் வரலற்றில் தொடர்ந்து மறைக்கப்பட்டதற்கான
சமூகப் பின்னணி, இவரைப்போலவே வள்ளலார், பாரதி இருவரையும் கருதுவதற்கான வாய்ப்பை இரண்டுக்
கட்டுரைகளும் அளிக்கின்றன.
மண்ணியல்
ஆய்வாளர்கள்
‘தமிழியல்
ஆய்வுகளுக்குக் கோவை ஞானியின் பங்களிப்பு’
எனும் கட்டுரை 20 நூற்றாண்டு ஆய்வறிஞர்களின் ஒருவரான ஞானியின் ஆய்வுப்பரப்பைக் காலம், அவரின் பின்புலம் சார்ந்தவைகளை விரிவான முறையில்
ஆராய்கிறது. ஞானியின் பன்மைத்துவச் சிந்தனைவெளியின் புரிதலை மையமிட்டு இக்கட்டுரை அமைந்துள்ளது.
தஞ்சைமொழி
எனும் மாயையை நீக்கிய வண்டல் சேற்றின் நறுமணம், சேறும் சகதியும், கமழத் திரண்டெழும்
நைந்துப்போகாத் தஞ்சை வாழ்வு எனும் இருக்கட்டுரைகளும் மண்சார்ந்த
படைப்புகளுக்கு முக்கியத்தும் கொடுப்பவரான சோலை சுந்தரபெருமாளின் சிந்தனைப்
பின்புலம் இவரின் படைப்புகளில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை ஆராயும் விதமாக அமைகிறது.
மதிப்புரைகள்
‘இன்று
ஏன் தேவை சங்க இலக்கியம்’ என்ற நூலுக்கான மதிப்புரையாக இடம்பெறும் சங்க இலக்கியம்:
தமிழின் தன்னிலை உருவாக்க அடிப்படைகளும் உயிர்களின் உலகைச் சமைக்கும் புதிய அரசியலுக்கான
முன்னெடுப்பும் என்ற கட்டுரையும், ‘து.மூர்த்தியின்
தமிழியல் புதிய தடங்கள்’ என்ற நூலுக்கான மதிப்புரையாக
அரசியலை நிறுவும் தமிழியல் தடங்கள் என்ற கட்டுரையும் தமிழியல் ஆய்வுக் களனை நீட்டித்தரும்
முன்னுரையக அமைகிறது. ‘ஆழியாளின் துவிதம்’ கவிதைத் தொகுப்பின் மதிப்புரையாக
இடம்பெறும் வலியும் வலியறிதலும் என்ற கட்டுரை
ஆழியாளின் சமூக பின்புலம் அவரின் படைப்புகளில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை விளக்குகிறது.
மூன்று விவாதங்களும் இலக்கிய விரிவாக்கத்தை முதன்மை படுத்தும் நோக்கில் அமைகின்றன.
நவீனமாக பார்க்கும் பொழுது சில இடர்பாடுகளும் ஏற்படும் இதைப்பற்றிய எந்த விவாதமும்
இடபெறாதது ஏனென்று தெரியவில்லை . திணை என்ற அதிகார படிநிலை கட்டமைப்பிற்குள் இருப்பதைச்
சாறாக மட்டும் உறிஞ்செடுத்து கோட்பாடாக உருவாக்குதல் என்பது நெருடலாக உள்ளது. அடுத்து அனைத்து மக்களிடமும் கோட்பாட்டுப்
பரவலாக்கத்தை எவ்வாறு கொண்டுச் செல்வது என்று சிந்திக்காதது போல உள்ளது. உள் முரண் களைந்து ஏற்றல், உரைகளில் இருக்கும் குறைபாடுகளைக்
பிரச்சினைகளை மட்டும் நீக்குதல் என்று கூறுவததெல்லாம்
சமாதனமாகத் தெரிகிறது. முன்னுரையில் கலை இலக்கிய ஆய்வுகளைச் சமுக, அரசியல், பண்பாட்டு,
வரலாற்றுப் பின்புலத்தில் அணுக வேண்டியதென்பதும் வரலாற்று மீளாய்வுக்கு அம்பேத்கார்
ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தையும் கூறியிருப்பது சிறப்பு. தெலுங்கு வேமானார்
பற்றிய தகவல்கள் இலக்கிய வரலாற்றிற்குப் புதியது. சித்தர்களின் மரபில் வைத்து வள்ளலார், பாரதி ஆய்வுகளைப் பார்த்ததும் நல்லாயிருக்கு.
சங்க இலக்கிய ஆய்வுகளை நவீனத்தன்மையுடன் அணுகுவதற்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் நூல்
இந்நூல் இந்த நூற்றாண்டின் மிகமுக்கியமான நூலாகும்.
No comments:
Post a Comment